இறுதியில் நூலாசிரியர் திரு.பழ.நெடுமாறன் ஏற்புரை ஆற்றினார். அவர் பேசும்போது, ”திராவிட இயக்க ஆட்சிகள் மத்திய அரசில் அங்கம் வகிக்கத் தொடங்கிய பின்னர்தான் தமிழகத்தின், தமிழினத்தின் வீழ்ச்சி தொடங்கியது. இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது திராவிடக்கட்சிகள் மத்தியில் அங்கம் வகிக்காத போதுதான், இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி மற்றும் ஆயுத உதவிகள் உட்பட எல்லா உதவிகளும் செய்யப்பட்டன. 1969ல திமுக, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக குடியரசுத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சஞ்சீவ் ரெட்டிக்கு எதிராக, இந்திராகாந்தியின் பேச்சைக்கேட்டுக்கொண்டு வி.வி.கிரிக்கு ஆதரவளித்து வெற்றி பெறச்செய்தது ஒரு அரசியல் தவறாகும். காங்கிரசை எதிர்த்து அரசியல் செய்து ஆட்சிக்கு வந்த திமுக,காங்கிரசுடன் அரசியல் உறவு கொண்டது பெரும்தவறு. அதே காங்கிரஸ் கட்சி திமுக ஆட்சியை கலைத்தது. நெருக்கடிகாலத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மிசாவில் கைதாகி அவதிப்பட்டனர்.
பின்னர் அதே காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்துகொண்டு “நேருவின் மகளே வருக!நிலையான ஆட்சி தருக!”என்றுகூறி தவறுசெய்தது.மத்தியில் ஆளும் கட்சிகளுக்கு பல்லக்குத்தூக்க திராவிடக்கட்சிகள் போட்டிபோடுவது இன்றுவரை தொடர்கிறது.மத்தியில் அங்கம வகித்ததினால்,தமிழக உரிமைப்பிரச்சனைகள் கொஞ்சமாவது குறைந்துள்ளதா?முலைப்பெரியாறு, காவிரி, பாலாறு, ஒகேனக்கல், சேது சமுத்திரம் போன்ற பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லையே? தங்களை மட்டுமே வளர்த்துக்கொள்ள மத்திய அரசில் அங்கம வகித்துள்ளன. இப்போது பணபலத்தை நம்பி ஆட்சியில் அமரமுடியும் எனக்கருதி, தமிழகத்தின் இயற்கை வளங்களை அழித்து, கட்சிக்கும் குடும்பத்துக்கும் சொத்துக்களைச்சேர்க்கின்றன.
மணல், மலை, காடுகள், கனிம வளங்கள், ஏரிகள், கண்மாய்கள், கடற்கரைப்பரப்பு என அனைத்து வளங்களும் சூறையாடப்படுகின்றன. திராவிடக்கட்சிகளின் நாற்பது ஆண்டுகாலத்தில் தமிழ்நாட்டுக்கும், தமிழினத்துக்கும் கேடுதான் அதிகம். தமிழகமுதல்வரிடம் ஆலோசனை கேட்டுத்தான், மத்திய அரசு எதையும் செய்யும் என சமீபத்தில் புதிய சட்டமன்ற கட்டிடத்தை திறந்துவைத்த பிரதமர் மன்மோகன் சிங் கூறியதிலிருந்து, இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும், இந்தியா இலங்கைக்கு ஆயுத உதவி செய்ததற்கும் கருணாநிதியின் ஆலோசனைதான் காரணம் என்பது அப்பட்டமான உண்மை. எனவே பிரச்சனைகளின் அடிப்படையில் மக்கள் போராட தயாராகவேண்டும்.அப்போது அரசு பயப்படும் என்பதற்கு, மதுரை யானைமலை பிரச்சனையில் அரசு பின்வாங்கியது உதாரணம். திராவிடக்கட்சிகளான, திமுக-அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக புதிய அரசியல் சக்தியை மக்கள் துணையுடன் உருவாக்க வேண்டியதற்கான ஆயத்த நூல்தான் இது” என்று கூறினார்.
No comments:
Post a Comment